Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Micah 4 >> 

1ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

2திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

3அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

4அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

5சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

6கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,

7நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.

8மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.

9இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.

10மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

11சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.

12ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

13மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Micah 4 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran