Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Matthew 28 >> 

1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

3அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

4காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.

5தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

6அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;

7சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

8அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

9அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

10அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

11அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.

12இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

13நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.

14இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.

15அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.

16பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

17அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

18அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Matthew 28 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran