Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Genesis 34 >> 

1லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.

2அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

3அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதுக்கு இன்பமாகப் பேசினான்.

4சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று சொன்னான்.

5தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

6அந்த நேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.

7யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

8ஏமோர் அவர்களோடு பேசி: என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.

9நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,

10எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.

11சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

12பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.

13அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:

14விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.

15நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம்செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

16உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.

17விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.

18அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் மகனாகிய சீகேமுக்கும் நன்றாகத் தோன்றியது.

19அந்த வாலிபன் யாக்கோபுடைய மகளின்மேல் பிரியம் வைத்திருந்ததால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்செய்யவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாக இருந்தான்.

20ஏமோரும் அவனுடைய மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதர்களுடன் பேசி:

21இந்த மனிதர் நம்முடன் சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இந்தத் தேசத்தில் குடியிருந்து, இதிலே வியாபாரம் செய்யட்டும்; அவர்களும் குடியிருக்கிறதற்கு தேசம் விசாலமாக இருக்கிறது; அவர்களுடைய மகள்களை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுப்போம்.

22அந்த மனிதர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடு குடியிருக்கச் சம்மதிப்பார்கள்.

23அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள் என்று சொன்னார்கள்.

24அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

25மூன்றாம் நாளில் அவர்களுக்கு வலி அதிகமானபோது, யாக்கோபின் மகன்களும் தீனாளின் சகோதரர்களுமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டுபேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாகப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்.

26ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

27மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

28அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் அனைத்தையும்,

29அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

30அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

31அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Genesis 34 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran