Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Habakkuk 1 >> 

1ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாகப் பெற்றுக்கொண்ட செய்தி.

2கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே!

3நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கச்செய்கிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு முன்னே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை சூழ்ந்துகொள்ளுகிறான்; ஆகவே நியாயம் புரட்டப்படுகிறது.

5நீங்கள் அந்நியமக்களை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு செயலை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.

6இதோ, நான் கல்தேயரென்னும் கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.

7அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

8அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.

9அவர்களெல்லோரும் கொடுமைசெய்ய வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் வற்றச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணல்அளவு மக்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.

10அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

11அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.

12கர்த்தாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

13தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

14மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன?

15அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.

16ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான்.

17இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?


  Share Facebook  |  Share Twitter

 <<  Habakkuk 1 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran