Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Ephesians 4 >> 

1எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,

2மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,

3சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.

4உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;

5ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

6எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.

7கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

8ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

9ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?

10இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார்.

11மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும்,

12பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும்,

13அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.

14நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,

15அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.

16அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

17எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள்.

18அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;

19உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

20நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.

21இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.

22அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு,

23உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி,

24உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.

25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.

26நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;

27பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.

28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.

29கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள்.

30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.

31எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும்.

32ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  Ephesians 4 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran