Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Chronicles 26 >> 

1அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.

2ராஜா இறந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.

3உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.

4அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து,

5தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதுள்ளவனாக இருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவனுடைய காரியங்களை வாய்க்கச் செய்தார்.

6அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.

7பெலிஸ்தர்களையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியர்களையும் மெகுனியர்களையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.

8அம்மோனியர்கள் உசியாவுக்கு வரிகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை எட்டியது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.

9உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.

10அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.

11உசியாவுக்கு போர்வீரர்களின் படையும் இருந்தது; அது செயலாளனாகிய ஏயெலினாலும் அதிகாரியாகிய மாசேயாவினாலும் எண்ணிக்கைபார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் அணி அணியாகப் போர்செய்யப் புறப்பட்டது.

12பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.

13இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.

14இந்தப் படையில் உள்ளவர்களுக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைக்கவசங்களையும், மார்புக்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.

15கோபுரங்கள்மேலும் மதிலின் முனையிலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பயன்படுத்துவதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த இயந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவனுடைய புகழ் வெகுதூரம் பரவியது; அவன் பலப்படும்வரை ஆச்சரியமான விதத்தில் அவனுக்கு அநுகூலமுண்டானது.

16அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

17ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடுகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பின்னே உட்பிரவேசித்து,

18ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள்.

19அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடு கோபமாகப் பேசுகிறபோது, ஆசாரிருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே தொழுநோய் தோன்றியது.

20பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.

21ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.

22உசியாவின் ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்களை ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.

23உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Chronicles 26 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran