Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  2 Samuel 4 >> 

1அப்னேர் எப்ரோனிலே இறந்துப்போனதைச் சவுலின் மகன் கேட்டபோது, அவனுடைய கைகள் பெலன் இல்லாமல் போனது; இஸ்ரவேலர்கள் அனைவரும் கலங்கினார்கள்.

2சவுலின் மகனுக்குப் படைத்தலைவர்களாக இரண்டுபேர்கள் இருந்தார்கள்; ஒருவனுக்கு பானா என்றும், மற்றவனுக்கு ரேகாப் என்றும் பெயர்; அவர்கள் பென்யமீன் மக்களில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீனின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.

3பேரோத்தியர்கள் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்தநாள்வரைக்கும் அங்கே வாழ்கிறார்கள்.

4சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயது உள்ளவனாக இருந்தான்; அப்பொழுது அவனுடைய செவிலியர் அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவன் ஆனான்: அவனுக்கு மேவிபோசேத் என்று பெயர்.

5பேரோத்தியனான அந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் நண்பகல் வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து,

6கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுவரை வந்து, அவனை வயிற்றிலே குத்தினார்கள்; பின்பு ரேகாபும் அவனுடைய சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.

7அவன் தன்னுடைய படுக்கையறையில் தன்னுடைய கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக் கொன்றுபோட்டு, அவனுடைய தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவனுடைய தலையை எடுத்துக்கொண்டு, இரவுமுழுவதும் பாலைவனம் வழியாக நடந்து,

8எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் இஸ்போசேத்தின் தலையைக்கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய உயிரை வாங்கத்தேடின உம்முடைய எதிரியாக இருந்த சவுலின் மகனான இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவான எங்களுடைய ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவனுடைய குடும்பத்தார்களின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.

9ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபுக்கும், அவனுடைய சகோதரன் பானாவுக்கும் பதிலாக: என்னுடைய ஆத்துமாவை எல்லாத் துன்பத்திற்கும் விலக்கிமீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

10இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று நினைத்து, சவுல் இறந்துபோனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு பரிசு கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

11தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலைசெய்த பொல்லாத மனிதர்களுக்கு எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்கவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்களுடைய கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாமல் இருப்பேனோ என்று சொல்லி,

12அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் வெட்டி, எப்ரோனிலிருக்கிற குளத்தின் அருகில் தூக்கிப்போடவும் தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்.


  Share Facebook  |  Share Twitter

 <<  2 Samuel 4 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran