Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  1 Thessalonians 5 >> 

1சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.

2இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

3சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

4சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.

5நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.

6ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.

7தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள்.

8பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.

9தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

10நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.

11ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.

12அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

13அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.

14மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.

15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.

16எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.

17இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.

18எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

19ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.

20தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள்.

21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

22தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.

23சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

25சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

26சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.

27இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.


  Share Facebook  |  Share Twitter

 <<  1 Thessalonians 5 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Dual Panel

Laporan Masalah/Saran