Bible 2 India Mobile
[VER] : [TAMIL]     [PL]  [PB] 
 <<  Matthew 22 >> 

1இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:

2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.

3அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.

4அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.

5அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.

6மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.

7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

8அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.

9ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

10அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.

11விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:

12நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.

13அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

14அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

15அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,

16தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

17ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

18இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

19வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

20அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.

21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.

23உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:

24போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.

25எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.

26அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.

27எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.

28ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.

29இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.

30உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;

31மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

32தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.

33மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

34அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

35அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.

37இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;

38இது முதலாம் பெரிய கட்டளை.

39இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.

40இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

41பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:

42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

44நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

45தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.

46அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.



 <<  Matthew 22 >> 


Bible2india.com
© 2010-2024
Help
Single Panel

Laporan Masalah/Saran